சும்மாவா சொன்னார்கள், "வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தைப் பண்ணிப்பார்' என்று. பெரும்பணக்காரர்களை விட்டுவிடுவோம். இருக்கிறது; செய்கிறார்கள்.
அதைப் பார்த்துவிட்டு "நாகரிகமாக இருக்கணுமில்ல' என்று சொல்லிக்கொண்டு நடுத்தர மக்கள் செய்து வைக்கும் திருமணங்கள் திக்குமுக்காட வைக்கின்றன.
முன்பெல்லாம் விசேஷங்களில் சாப்பாடு சரியில்லையென்றால் ஊர்ப்புறத்தில் "ஒரு சோறு- குழம்பு போட்டியா?' எனக் கேட்பார்கள். அதென்ன ஒரு சோறு, ஒரு குழம்பு? நாம் திரும்பக் கேட்டதில்லை. இப்போது திருமண வீடுகளில் சோறு வகைகள், குழம்பு வகைகளைப் போட வேண்டியிருக்கிறது. இலை நிறைய வேண்டும் என்பதில் எல்லோரும் கவனமாக இருக்கிறார்கள் (வயிறு நிறைய வேண்டும் என்றுகூட இல்லை!).
இலையில் வைக்க சில இனிப்பு வகைகள். பிறகு டம்ளரில் ஒரு பாயசம் அல்லது பால். அதேபோல காரத்தில் வடை அல்லது போண்டா, கூடவே பொறித்த ஏதாவது ஒன்று.
சப்பாத்தி, அதற்கு "தால்', வெஜிடபிள் பிரியாணி அல்லது ஏதாவது ஒரு கலவை சாதம். அதன்பிறகுதான் வடித்த சோறு வைப்பார்கள். சாம்பார், வத்தல் குழம்பு அல்லது மோர்க் குழம்பு, ரசம், மோர். மூன்றிலிருந்து ஐந்து காய்கறி வகைகள். பழங்கள், பீடா, தண்ணீர் பாட்டில்.
எல்லாம் சேர்த்து மொத்தமாக கான்ட்ராக்டில் விட்டால் ரூ. 200-க்கும் மேல் செல்கிறது. பார்த்துப் பார்த்து, சிக்கனமாகச் சேர்த்து சேர்த்து என்றால் ரூ. 150-க்கு குறைக்கலாம். இதேபோலவே சிற்றுண்டி வகைகளும். "மெனு' பட்டியலைப் பார்த்தால் அது சிற்றுண்டியே அல்ல என்பது வேறு.
அசைவம், சொல்லவே வேண்டாம். முதலில் "ஸ்டார்ட்டர்ஸ்' என்கிறார்கள். சூப், பொறித்த சிக்கன். சாப்பிடத் தொடங்குகிறார்களாம்!
விசேஷ நாளைக்கு முன்னதாக மூச்சடைக்கும் சமாச்சாரம் "தங்கம்'. விலைவாசி ஏறுகிறது, கூடவே தங்கத்தின் விலை விண்ணை முட்டுகிறது என்றெல்லாம் பேசுகிறோம். கைக்கூலி பெறலாமா?
வரதட்சிணை வாங்குவது குற்றமல்லவா? எல்லாமும் இருக்கிறது. சம்பளம் போதவில்லை என்ற குரலும் ஓயாமல் ஒலிக்கிறது. என்ன செய்கிறார்களோ தெரியவில்லை - சாதாரண வீட்டுத் திருமணத்தில்கூட சில பத்து லட்சங்களில் தங்கம் போடுவதை மரியாதையாகக் கருதுகிறார்கள்! பெரிய திருமணம் என்றால் கிலோ கணக்கில்தான் எல்லாமும் (தங்கத்துடன் வெள்ளியும் கிலோ கணக்கில்!). கேட்டுப் பேரம் பேசி பெறுவது ஒருபுறம் என்றால், தொடக்கத்திலேயே சிலர் அதை முன்கூட்டியே முடிவும் செய்துவிடுகிறார்கள்.
ஜவுளி வாங்கும்போது, உடன் சென்றாலே தலை சுற்றிவிடும். ஜவுளிக் கடைகளில் உடன் வந்திருப்போர் ஓய்வெடுக்கும் அரங்குகளைக் கட்டிவிட்டால் நன்றாக இருக்கும்.
முகூர்த்தத்துக்கு எனச் சொல்லி சில பத்தாயிரங்களைச் செலவழிக்கத் தயாராக இருக்கிறார்கள். வெளிப்படையாகக் கேட்கிறார்கள். அந்த ஒரு மணி நேரத்துக்குத்தான் எத்தனை முக்கியத்துவம்? அதன்பிறகு வேறெப்போதும் அந்த முகூர்த்தப் புடவையைக் கட்டுவதாகத் தெரியவில்லை.
முகூர்த்தப் புடவைக்கு ஜாக்கெட் தைப்பதும்கூட இப்போது முக்கியமானதாம். ஒரு நண்பர் சொன்னார், துணி எடுத்துக்கொடுத்து, தையல் கூலியாக ரூ. 2,000 கொடுத்தார்களாம்! என்ன செஞ்சிருப்பாங்க...!?
சரி போகட்டும். மணமக்களுக்குத்தான் முகூர்த்த ஜவுளி என்றில்லை. மணமக்களின் பெற்றோர், உடன்பிறந்தவர்களும் இப்போது முகூர்த்த ஜவுளி எடுக்கிறார்கள். முகூர்த்த நேரத்தில் இவர்கள் கட்டியிருக்க வேண்டும் என்று. இவை மட்டுமே "ல'கரங்களைத் தாண்டுகிறது.
அதன்பிறகு உறவுகளுக்கு வாங்க வேண்டும். அதுகூட ஜவுளிக்கடைக்காரர்களின் புண்ணியத்தில் ஏதாவது "செட்' வகைகள் கிடைக்கும் - ஓரளவு குறைந்த விலையில்.
ஏழை எளிய மக்களின் சாதாரண திருமணங்களுக்கு ஆகும் மொத்த செலவில், பிரம்மாண்டமான திருமணங்களில் பத்திரிகைகள் மட்டுமே அச்சிடப்படுகின்றன. பத்திரிகையைப் பிரித்தால் நறுமணம் வீசுமாம், இன்னிசையும் கேட்குமாம்! உண்மையில் செலவு செய்யும் குடும்பத் தலைவனின் மனதில் என்ன இசை கேட்கும்...!
இந்தப் பட்டியலில் விடுபட்டவை ஏராளமாக இருக்கலாம். எங்காவது சிக்கனம் பிடிக்கலாம் என்றால் உடனிருப்பவர்கள் "கெüரவமாக இருக்க வேண்டாமா?' என ஓர் அஸ்திரத்தை ஏவுவார்கள்.
இப்படியாக நடைபெறும் திருமணங்கள் இப்போது அதிகரித்திருக்கின்றன. கொஞ்சமும் குறைந்தால் நிறைவாக இருக்காது என்கிறார்கள். நிறைவு யாருக்கு? என்பதும் இருக்கிறது.
இந்தப் போக்கு நல்லதாகப்படவில்லை. இரு மனங்கள் இணைகின்றன. அதை உறவுகள் கொண்டாட வேண்டும். ஆனால், பெரும்பாலான திருமணங்கள் வட்டிக்கடைக்காரனின் தயவில்தான் நடக்கிறது என்பது ஊரறிந்த உண்மை.
திருமணக் கடனைக் கட்டுவதிலேயே பலருக்கும் வாழ்க்கை தொலைந்துவிடுகிறது. பிறகு எங்கே, அந்தப் படகைக் கவிழ்ந்துவிடாமல் செலுத்துவது?
உண்மையில் பார்த்தால், ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து வாழ்கிறோம் என்பதை ஊருக்கும் உறவுக்கும் அறிவிக்க வேண்டும், அவ்வளவே.
சொல்லாமல் வாழ்ந்தால் "நரம்பில்லாத நாக்கு பலவாறும் பேசும்'. இதற்குத்தான் இந்தக் குதியாட்டமா?
எந்த அளவுக்கு எளிமையாக விழாக்களை நடத்துகிறோமோ, அந்த அளவுக்குக் கடனில்லாத வாழ்க்கை கிடைக்கும். வாழ்க்கையின் தொடக்கத்துக்கே பெரும் தொகையைச் செலவிட்டுவிட்டு, பெருவாழ்வு வாழ்வது எப்படி? மக்களே சிந்திப்பீர்!
No comments:
Post a Comment